Local News

மைதான வசதியின்மை இருந்தும் சிறப்பாக நடைபெற்ற கலையருவி தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி – 2026

By Nadaraja MalarvendanJune 7, 2026
மைதான வசதியின்மை இருந்தும் சிறப்பாக நடைபெற்ற கலையருவி தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி – 2026
மைதான வசதியின்மை இருந்தும் சிறப்பாக நடைபெற்ற கலையருவி தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி – 2026 பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட எல்டெப் கலையருவி தமிழ் வித்தியாலயம் ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி, வித்தியாலய அதிபர் திரு. தனபாலசிங்கம் கிங்ஸ்டன் அவர்களின் தலைமையில் பசறை பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டி, ஆரம்பபிரிவு பாடசாலை மட்டத்தில் இடம்பெற்றிருந்தாலும், அதன் ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களின் பங்கேற்பு அளவு பாராட்டத்தக்கதாக அமைந்தது. மைதான வசதியின்மை போன்ற சவால்கள் இருந்தபோதிலும், நிகழ்வு மிகுந்த ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பசறை வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஸரீனா பேகம் கலந்துகொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கோட்ட கல்வி பணிப்பாளர் மற்றும் பசறை கல்வி வலயத்தின் ஓய்வுநிலை ஆசிரியர் ஆலோசகர் திரு. க. தனராஜ் அவர்கள் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினராக வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திரு. பி. கமலேந்திரன் பங்கேற்று, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்துரையாற்றினார். இதேவேளை விளையாட்டுத்துறை ஆசிரியர் ஆலோசகர் திருமதி வட்சலா, பசறை பிரதேச சபை உறுப்பினர்கள் திரு. சுப்பையா சுதாகர் மற்றும் செல்வி வாசன் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மேலும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் பெருமளவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தனர். அங்கிகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி மிகவும் ஒழுங்குடனும் கண்ணியத்துடனும் இடம்பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறுவர் மெய்வல்லுனர் நிகழ்வுகள், குறுந்தூர ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், நின்றுநீளம் பாய்தல் போன்ற பல்வேறு குழுநிலை போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கலையருவி லயன்ஸ் மற்றும் கலையருவி ஈகல்ஸ் ஆகிய இல்லங்களை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்கள் ஆரோக்கியமான போட்டியுடன் செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்களும் வழங்கப்பட்டன. மைதான வசதியின்மை போன்ற சவால்களை மீறி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து செய்த ஒத்துழைப்பின் பலனாக இந்த விளையாட்டுப் போட்டி சிறப்பாக நிறைவு பெற்றது. இந்த நிகழ்வு, பசறை கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படுகிறது. இது மாணவர்களின் உடல் வளர்ச்சியையும், ஒற்றுமை , திறனையும் மேம்படுத்தும் ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. — நடராஜா மலர்வேந்தன்